SrImath AththAn thirumALigai – AzhwArthirunagari

thirumALigai Vaibhavam

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீ முடும்பை பூர்ணாய நம:  ஸ்ரீமத் வரவர முனயே நம: ஸ்ரீமத் வரத குரவே நம: 

வைகுண்டேது பரேலோகே ஸ்ரீஸஹாயோ ஜனார்த்தன: |

 உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித : பரமேஸ்வர: ||

ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன், ஸம்ஸாரிகளை உஜ்ஜீவிக்கும் பொருட்டு, இப்பாரத தேசமெங்கும் பல்லாயிரக்கணக்கான ஊர்களிலே கோயில் கொண்டுள்ளான். இவற்றில் விசேஷமானவை, ஆழ்வார்களாலே பாடப்பெற்ற திவ்ய தேசங்களாகும். நூற்றி எட்டுத் திருப்பதிகள் எனப்படும் இவற்றில் விசேஷமானவை கோயில், திருமலை, பெருமாள் கோயில் எனப்படும் மூன்றும் ஆகும். எல்லாவற்றிலும் ப்ரதானம் “கோயில்” எனப்படும் ஸ்ரீரங்கமே ஆகும். ஸ்ரீரங்கம் தான் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் ராஜதானி(தலைநகரம்) ஆகும். ஆகையால் தான் “ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரியம் அநுபத்ராவமநுதினம் ஸம்வர்த்தய” என்று தினமும் அநுஸந்திக்கிறோம்”. திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்” என்று அங்கிருந்து கொண்டு தான் நம் ஆசார்யர்கள் நம் ஸம்ப்ரதாயத்தை வளர்த்து வந்தார்கள்.

சதுஸ்ஸப்ததி ஸிம்ஹாஸநாதிபதிகள்

ஓராண் வழியாக வந்த குருபரம்பரையின் நடுநாயகரத்னமான ஸ்ரீஉடையவர் (ராமாநுஜர்) ஒரு ஸமயம் வீரநாராயணபுரம் எழுந்தருளினார். அங்குள்ள பெரிய ஏரியின் 74 மதகுகள் வழியாகப் பாயும் நீரானது, சுற்றியுள்ள அத்தனை ப்ரதேசங்களையும் வளங்கொழிக்கச் செய்வதை பார்த்தார். “நம் ஸம்ப்ரதாயமும் இதே போல் செழித்தோங்கிப் பெருகி ஜனங்களை வாழ்விக்க வேணும்” என்று திருவுள்ளம் பற்றினார். ஆயிரக்கணக்கான தம் சிஷ்யர்களிலே 74 பேரைத் தேர்ந்தெடுத்தருளி “பாருலகில் ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும்” என்று உலகோர்க்குப் பஞ்சஸம்ஸ்கார பூர்வகமாக ஹிதத்தை உபதேசிக்கும்படி நியமித்தருளினார். இவர்களே சதுஸ்ஸப்ததி ஸிம்ஹாஸநாதிபதிகள் எனப்படுவர். இந்த ஆசார்யர்களின் திருவம்சத்தவர்களே “ஆசார்ய புருஷர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர்.

ஸ்ரீ முடும்பை நம்பி

காஞ்சிபுரத்துகருகில் முடும்பை என்னும் அக்ரஹாரத்தில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் அவதரித்தவர் ஸ்ரீவரதாசாரியர் என்பவர். இவர் பால்யத்திலிருந்தே மஹாஞானியாகவும், ஆழ்வார்கள் அருளிச்செயல்களில் ஆழ்ந்த ஞானமும் ஈடுபாடும் உடையவராகவும், ப்ரஸித்தமான பண்டிதராகவும், உதாரராகவும், வாத்ஸல்யபரிபூர்ணராயும், தோஷமற்றவராகவும் இருந்தார். அத்தோடு அவர் ராமாநுஜரின் பஹ்னீபதியும்(ஸஹோதரியின் பர்த்தா) ஆவார். தேஹஸம்பந்தத்தோடு, மட்டுமல்லாது ஆத்மஸம்பந்தமும் வேணுமென்று உடையவர் திருவடிகளில் ஆச்ரயித்தவர். யதிராஜரின் திருவடித்தாமரைகளிலேயே சுற்றி வரும் வண்டு போன்றவர். கூரத்தாழ்வானின் ப்ரியத்துக்குப் பாத்ரமானவர். கெளரவம் தோற்ற “முடும்பை நம்பி” என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார். இவற்றை

“ஸ்ரீ ராமாநுஜ ஸம்யதீந்த்ரசரணம் ஸ்ரீவத்ஸ சிஹ்ன ப்ரியம்,

ஸேவேஹம் வரதார்ய நாமகமமும் ஸூக்த்யா ப்ரஸித்தம் முதா |

பால்யாத் பரிபூர்ண போத சடஜித் காதாநுராகோஜ்வலம்,

வாத்ஸ்யம் பூர்ண முதாரம் ஆச்ரிதநிதிம் வாத்ஸல்ய ரத்னாகரம் ||

ஸ்ரீராமாநுஜ யோகீந்த்ர பதபங்கஜ ஷட்பதம் |

முடும்பை பூர்ணமநகம் வந்தே வரதஸம்க்ஞகம் ||”

என்று இவரது தனியன்களிலிருந்து அறியலாம். 74 ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஸ்ரீமுடும்பை நம்பியும் ஒருவராவார். இவர் குமாரர் ஸ்ரீராமாநுஜ நம்பி. முதலியாண்டான் போலே எம்பெருமானார்க்கு ராமாநுஜ நம்பியும் பாகிநேயர் (மருமான்) ஆவார். இவர் தனியன்

“பாஷ்யக்ருத் பாகிநேயோசஸெள பவசந்தாப சாந்தயே |

வரதார்யாத்மஜோஸ்மாகம் பூயாத் ராமாநுஜாஹ்வய: ||”

இவர் குமாரர் ஸ்ரீ முடும்பையாண்டான் (தாசரதி). இவர் முடும்பையிலிருந்து ஸ்ரீரங்கத்துக்குக் குடிபெயர்ந்தருளினார் என்பதை “ஸ்ரீரங்கவாஸப்ரியம்” என்ற இவர் தனியனிலிருந்து அறியலாம். இவர் குமாரர் தேவப்பெருமாள் என்னும் வரதார்யர். இவர் குமாரர் இளையாழ்வார் என்னும் லக்ஷ்மணாசாரியார்.

mudumbai-nambi-to-AththAn-swamyமுடும்பை நம்பி வம்ச பரம்பரை படம் உதவி கோயிலாத்தான் கஸ்தூரிரங்கன் ஸ்வாமி

ஸ்ரீபிள்ளை லோகாசாரியார்

இளையாழ்வாரின் குமாரர்களில் ஒருவர் ஸ்ரீக்ருஷ்ணபாதகுரு. இவர் நம்பிள்ளையின் காலக்ஷேப கோஷ்டியில் ப்ரதமச்ரோதாக்களாயிருந்த இரு க்ருஷ்ணமாசாரியர்களில் ஒருவர். “வடக்குத் திருவீதிப்பிள்ளை” என்றே ப்ரஸித்தர். “இந்த நாடறியமாறன் மறைப்பொருளை நன்குரைத்த” ஈடுமுப்பதாறாயிரப்படியை ப்ரஸாதித்தவர். திருவாய்மொழியைக் காத்த குணவாளர். “ஆசார்ய ஸம்மதி” என்ற க்ரந்தமும் அருளிச்செய்தார். இவரது குமாரர்கள் இருவர். ஜ்யேஷ்டர் ஸ்ரீபிள்ளை லோகாசாரியார். ஸுப்ரஸித்திபெற்ற அஷ்டாதச ரஹஸ்யங்களை அருளிச்செய்து ப்ரமாணங்களைக் காத்ததோடு, துருஷ்கக் கலாபத்தில் நம்பெருமாளை ஸ்ரீரங்கத்தினின்றும் எழுந்தருளப்பண்ணி, ப்ரமேயத்தையும் காத்தருளினவர். அவர் திருத்தம்பியார் அழகியமணவாளப் பெருமாள் நாயனார். திருப்பாவை ஆறாயிரப்படி, திருவிருத்தம் ஆறாயிரப்படி, திருப்பல்லாண்டு வ்யாக்யாநங்கள், ஆசார்யஹ்ருதயம், அருளிச்செய்தவர். இவ்விருவரும் நைஷ்டிக ப்ரம்மசாரிகளாயிருந்து விட்டனர். இளையாழ்வாரின் மற்றொரு குமாரர் வரதாசாரியார். இவர் குமாரர் ராமாநுஜகுரு. இவர் குமாரர் அழகப்பங்கார். இவர் குமாரர் பேரருளாள ஸ்வாமி (தேவராஜ குரு). இவர் குமாரர் ராமாநுஜம் பிள்ளை.

மணவாளமாமுனி ஸம்பந்தம்

நம்பெருமாள் நியமனப்படி கோயில் பெரிய திருமண்டபத்திலே, நம்பெருமாள் திருமுன்பே ஈடு முப்பத்தாறாயிரப்படி காலக்ஷேபம் செய்து “ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கர்” என்ற அபிதானத்தையும், “ஸ்ரீசைலேசதயாபாத்ரம்” தனியனையும் அடைந்த ஸ்ரீமந்மணவாளமாமுனிகளின் காலக்ஷேப கோஷ்டி மிகவும் ப்ரஸித்தமாக இருந்தது. விசதவாக் சிகாமணியான அவருடைய கோஷ்டியில் அந்வயித்த முதலிகளில் ராமாநுஜம் பிள்ளையும் ஒருவர். ராமாநுஜம் பிள்ளையும், மாமுனிக்குப் பாதரேகை ஸ்தானத்தராயிருந்த ராமாநுஜ ஜீயரும்(வானமாமலை) ஒருவருக்கு ஒருவர் அத்யந்தப்ரியதமராயிருந்தனர். “நமக்குண்டான அதிசயங்கள் எல்லாம் இவர்க்கும்(வானமாமலை ஜீயருக்கும்) உண்டாக வேணும்” என்ற மாமுனிகள் நியமனத்தை “வேலேவ ஸாகரம்” போலே அதிக்ரமியாது வானமாமலை ஜீயருக்கு ப்ரிய ஸுஹ்ருத்தாக ராமாநுஜம் பிள்ளை இருந்தார். அவரிடம் பகவத் விஷயகாலக்ஷேபமும் பண்ணினார்.

பெரிய ஜீயர் பரமபதம் அடைதல்

பெரிய ஜீயருக்கு வார்த்திகத்தோடு நோயும் வந்து அநுவர்த்திக்க, “நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்றிவையொழியக் கூயேகொள் அடியேனை” என்று “அந்தோ! எதிராசா நோய்களால் என்னை நலுக்காமல், சதிராக நிந்திருத்தாள்தா” என்று தமதார்த்தியெல்லாம் தோற்றக் கூப்பிட்டு சரிராவஸநாஸமயம் வந்தவாறே தம்மை ஆச்ரயித்திருந்த முதலிகள் பலரையும் ஓரோர் திவ்யதேசங்களுக்கு சென்று எம்பெருமான் கைங்கர்யங்களை நடத்திவரும்படி நியமித்தருளினார். ஸ்வதேசமான திருநகரியில் ஸ்வாமி ஆழ்வார்திருவடிகளிலே திருவுள்ளம் குடிபோய் “ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யங்களைக் குறைவின்றிச் செய்யவல்லார் ஆர்” என ஆராய்ந்து, ராமாநுஜம்பிள்ளையும் அவர் குமாரர் ஆத்தானை (வரதாசாரியாரை)யும் அழைத்து தாம் ஆதரத்துடன் ஆராதனம் செய்து போந்த பேரருளாளனையும், அருளி, “நீங்கள் திருநகரி சென்று ஸ்ரீ ஆதிப்பிரானையும் ஸ்ரீசடகோபரையும் நமக்காகத் துஞ்சும் போதும் விடாது அநுவர்த்தித்துத் திருவாய்மொழியையும் வளர்த்துக் கொண்டு போருங்கோள்” என்று நியமித்தார். ஜீயர் திருநாடலங்கரித்தருளினவாறே முதலிகளெல்லோரும் ஸ்ரீசூர்ணபரிபாலநந் தொடங்கி இயல் சாத்து வரை எல்லாக் கைங்கர்யங்களையும் ஸம்ப்ரமமாக நடத்தினார்கள்.

ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளை திருநகரி எழுந்தருள்தல்

பெரிய ஜீயரின் பரமபதப்ராப்தியாலும், வானமாமலை ஜீயரும் (பத்ரிகாச்ரமயாத்திரை) அருகிலில்லாமையாலும், போரக்லேசத்தோடே எழுந்தருளியிருந்த ராமாநுஜம் பிள்ளைக்கு ஓரிரவில் ஸ்வாமி ஆழ்வார் “உடனே திருநகரியேற வந்து சேரும்படி” ஸ்வப்ன முகேந நியமித்தருளினார். மாமுனிகள் நியமனமும், மகிழ்மாறன் நியமனமும் பிள்ளையைத் தெளிவிக்கத் தெளிந்து ஹ்ருஷ்டராய், நம்பெருமாளிடம் விடை கொண்டு, கோயிலிலுள்ள தம் ஸகலஐஸ்வர்யங்களையும் அங்கேயே விட்டு, “ஸபுத்ரபெளத்ரஸ்ஸகண:” என்றபடி குடும்பத்துடனும் சிஷ்யர்களுடனும் திருநகரி நோக்கி விடை கொண்டார். இதறிந்த வழியிலுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் பலரும், “லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந:” என்றாற்போலே ஆழ்வார் கைங்கரிய ஸ்ரீயோடு எழுந்தருளும் உத்தமமாம் முடும்பைக் குலம் உதித்த பிரானை ஆதரித்தும் ஸேவித்தும் சிஷ்யர்களாகியும் பின் தொடர்ந்தனர். இப்படி மஹாவைபவத்தோடே திருநகரியை அடைந்து திருப்பொருநலில் திருச்சங்கணித்துறையில் நீராடி, ஸ்வாமி ஆழ்வாரும் போரத்திருவுள்ளமுகந்து, தமது சத்ர, சாமர. தண்ட, தீப மேள தாள வாத்ய ந்ருத்யங்களான ஸகலவரிசைகலோடு, பரிவட்டம், மாலை, தீர்த்தம், சுருள், சந்தனம், அபயஹஸ்தம், திருத்துழாய், புஷ்ப ப்ரஸாதங்கள் அனுப்பி எதிர் கொண்டழைத்துக் கொண்டார். பிள்ளையும், ஆதிப்பிரானையும், திருப்புளியின் அடியில் உறையும் ஞானதேசிகனையும் ஸேவித்து அளப்பரிய ஆனந்தமடைந்தார். ஸ்வாமி ஆழ்வாரையும் போரவுகந்தருளி, அர்ச்சகமுகேந “சடகோபாசாரியார்” என்று அருளிப்பாடிட்டு “நம் கோவில் பரிகரமனைத்துக் கொத்தும் நிர்வஹித்து வாரும்” என்று நியமித்தருளி நித்யம் ஸாயரக்ஷை நித்யாநுஸந்தான காலத்தில் (ஸ்வாமி ஆழ்வார்) தாம் அமுது செய்தருளுகிற ப்ரஸாதம், நெய், கீரையமுது, உப்புச் சாற்றமுது ஆகிய தளிகை ப்ரஸாதத்தையும் பிள்ளைக்கு பஹுமானமாகத் தந்தருளினார். அது முதல் ராமானுஜம்பிள்ளையும் “சடகோபாசாரியார்” என்ற தன்னேற்ற அருளிப்பாட்டையும் “கோவில் பரிகரமனைத்துக் கொத்தும்” என்ற கொத்தருளிப்பாட்டையும் பெற்றார்.

திருநகரியில் நித்யவாஸம்

“ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ப்ரபர்ண்யுத்தரேதடே” என்கிறபடியே திருநகரியில் ததிருத்தாம்ப்ர பர்ணியின் ச்லாக்யமான(சிறந்த, உயர்ந்த) கரையாகிய தெங்கரையிலே, வடக்குத் திருவீதிப் பிள்ளையின் வம்சத்தவராகையாலே ஸ்வாமி ஆழ்வாரின் வடக்குத் திருவீதியிலே தமக்குத் திருமாளிகை அமைத்துக் கொண்டு தம் திருவாராதனப் பெருமாள்களை ஆராதித்துக் கொண்டு வரவரமுனி திவ்யாக்ஞைப்படி ஆதிநாதர், ஆழ்வாரின் நித்ய, பக்ஷ, மாஸ, அயந, ஸம்வத்ஸரோத்ஸவங்களெல்லாம் ஒன்றால் ஒன்றும் குறைவின்றி, கோயில் பரிகரமனைத்துக் கொத்தும் நிர்வஹித்து நடத்திவந்தார். ஆழ்வார் கைங்கர்யத்தோடு, அவர் திருவுள்ளம்(மேலும்) உகக்கும்படி அவராலே தந்தை, தாயாக அடையப்பட்ட திருத்தொலைவில்லிமங்கலத்து எம்பெருமான்கள், திருக்குளந்தை, திருக்கோளுர் எம்பெருமான்கள் “ஆழ்வாரையன்றி தேவுமற்றறியாத” மதுரகவியாழ்வார் கைங்கர்யங்களையும் நிர்வஹித்து நடத்தி வந்தார்.

பிள்ளை அருளிச் செய்தவை

ராமாநுஜம் பிள்ளை கந்தாடை நாயனுக்கு ஸாதிக்க, கந்தாடைநாயனும் திருவாய்மொழிக்கு ஸம்ஸ்க்ருத அரும்பதம் அருளிச்செய்தார். பகவத்விஷய அரும்பதத்தில் “பிள்ளை நிர்வாஹம்” என்று சில இடங்களில் ராமாநுஜம் பிள்ளையின் நிர்வாஹங்கள் காட்டப்பட்டுள்ளன.

ஸ்ரீ ஆத்தான் ஸ்வாமி

ராமாநுஜம் பிள்ளையின் திருக்குமாரர் வரதாசாரியார். இவர் பால்யத்தில் திருத்தகப்பனாரோடு ஸ்ரீரங்கத்தில் மாமுனி கோஷ்டியில் அந்வயித்தவர். வானமாமலை ஜீயரின் அத்யந்தப்ரிய பாத்ரராயும், அவர் திருவடிகளில் ஆறா அன்புடையவராயும் இருந்தார். ஜ்ஞாநாநுஷ்டாநங்களில் மிக்கும், அருளிச் செயல்களில் ஆழ்ந்த ஞானத்தோடு ஈடுபாடும் உடையவராய், அதிமேதாவியாய் இருந்தார். திருநகரிக்கெழுந்தருளிய சில வருஷங்களிலேயே ராமாநுஜம் பிள்ளை பரமபதித்து விட்டார். “ஆத்தான்” என்றே ப்ரஸித்தராயிருந்த வரதாசாரியார், ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யதுரந்தரராய், கோயில் பரிகரம் அனைத்துக் கொத்தும் நிர்வஹித்து, நித்ய நைமித்திக்கோத்ஸவங்களைக் குறைவின்றி நடத்தி வந்தார். ஆதிநாதருக்குப் பங்குனி உத்திரத்திருக்கல்யாணோத்ஸவத்தையும் ஏற்படுத்தி பங்குனித்திருத்தேரையும் செய்து ஸமர்ப்பித்து நடத்தி வைத்தார். ஆழ்வாருக்கு நிரவதிகமான ஸம்பத் சேகரித்தும், திருப்பீதாம்பரங்கள், திருவாபரணங்கள், திருப்பல்லக்குகள் முதலானவை செய்து ஸமர்ப்பித்து நடத்தி வந்தார்.

ஆத்தாநிதீஹ விதிதோ வரதார்ய சர்மா |

காரீந்த்ரஸுநு க்ருதி ஸாகர பூர்ண சந்த்ர : ||

என்கிறபடியே வரதகுருவும் “ஆத்தான்” என்றே ப்ரஸித்தராய், அருளிச்செயல்களுக்கு ப்ரவசநக்ரமத்தில் அத்யந்தம் அபிவ்ருத்திகரராய் “பகவத்விஷயம் வரதாசாரியார்” என்றே ப்ரஸித்தராய், தர்சந நிர்வாஹமும், ஆழ்வார் கைங்கர்ய நிர்வாஹமும் செய்து கொண்டு மஹாப்ரபாவத்தோடே எழுந்தருளியிருந்தார்.

இவர் அருளிச் செய்தவை

“பகவத் விஷயம் வரதாசாரியார்” என்றே நிரூபகமாம் படியிறே, பகவத் விஷயத்தில் அவகாஹநம் இருந்தபடி, திருநகரியில் திருப்புளியாழ்வாரடியில் மணவாள மாமுனி திருவடிக்கீழ் பகவத் விஷயம் ஸாதித்தருளினார். குன்றத்தூர் அப்பனுக்கு பகவத் விஷயம் ஸாதிக்க, அவரும் திருவாய்மொழிக்கு, அரும்பதம் அருளிச்செய்தார். இவர் திருவடிகளில் ஆச்ரயித்த வேதாந்திராமாநுஜ ஜீயரும் “திவ்யஸூரிப்ரபாவதீபிகை” முதலானது அருளிச்செய்தார்.

ஸ்ரீ ஞானத்ருஷ்டி அழகப்பங்கார் ஸ்வாமி

ஸ்ரீ வாநசைல முனிராஜ பதாப்ஜ ஸங்காத்

ராமாநுஜார்ய தநயஸ் ஸுதராம்பபாஸே

என்றும் “தஸ்யாபூத் தநயோ லோகவிச்ருதஸ் ஸுந்தராஹ்வய: யதாத்மநாவதீர்ணோத்ர வாநசைலேச ஸுந்தர: ||” என்கிற படியே வரதார்யரிடத்திலே(ஆத்தான் ஸ்வாமி) வானமாமலைப்பெருமாள் போரவுகந்தருளி, அவருக்குத்தாமே திருக்குமாரராய் அவதரித்தருளினார். ஸுந்தராசாரியார் என்ற திருநாமமுடைய இவர் திகந்த விச்ராந்த ப்ரஸித்தி பெற்று வாழ்ந்தருளினார். இவர் ப்ரஸித்தி இருந்தபடி என்என்னில் “யச்சிஷ்யபாவமநவாப்ய சடாரிவேதபாவம் ப்ரபோத்துமநலம் பஹுசாஸ்த்ர வித்பி|| ஸோயம்ஹி ஸுந்தரகுருர் விஜயத்வஜோபூத் ஸித்தாந்த ஸீம்னி யதிராஜகுரோர் மஹாத்மா||

ஸகலசாஸ்த்ர நிபுணர்களான மஹாவித்வான்களும் கூட இவர் ஸம்பந்தம் பெற்றாலொழிய ஆழ்வார் அருளிச் செயல் வ்யாக்யாநபோத முண்டாவது அரிது என்று நினைக்கும் படியாயும், ராமாநுஜஸித்தாந்தத்தின் எல்லைக்கு விஜயத்வஜபூதராயும், “ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார்” என்றே ஸகலரும் கொண்டாடும்படி மஹாப்ரபாவமுடையவராயுமிருந்தார்.

இவர் அருளிச்செய்தவை

ஸாரார்த்த மாலை, ஈட்டுக்குப் பாட்டுத்தோறும் உபந்யாஸம், நூறு திருவாய்மொழிக்கும் உபந்யாஸம், பத்து பத்துக்கும் உபந்யாஸம், உபோத்காதோபந்யாஸம், நிகமந உபந்யாஸம், ஈட்டு ப்ரமாணத்திரட்டுக்கு உரை, திருப்பாவை தாத்பர்யம், திருப்பாவை கருத்து, திருமந்த்ரயோஜனை, த்வயயோஜனை உபந்யாஸம், மூவாயிரத்துக்கும் ப்ரமாணத்திரட்டு, ரஹஸ்யத்ரய, ஸ்ரீவசந பூஷண, ஆசார்யஹ்ருதய ப்ரமாணத்திரட்டு முதலானதுகள் அருளிச்செய்தார்.

இவர் அருளிச்செய்யக் கேட்டு, கேட்டபடியே அப்பு முதலானோர் அரும்பதம் அருளிச்செய்தார். அப்பு அரும்பதம், பிள்ளை அரும்பதம், அய்யங்கார் அரும்பதம், ராமாநுஜய்யங்கார் அரும்பதம், தொட்டையரும்பதம் போன்ற அரும்பதங்களும் உண்டாயின. அப்புவும், பிள்ளையும் மூவாயிரத்துக்கும் அரும்பதங்களும், தத்வத்ரய, ரஹஸ்யத்ரய, ஸ்ரீவசநபூஷண, ஆசார்யஹ்ருதய அரும்பதங்களும், உபந்யாஸங்களும், பரந்த படிக்கும் கடினவாக்யார்த்தம், தீபப்ரகாசிகையரும்பதமும் அருளிச்செய்தனர். ஆக இப்படி ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார் காலம் “அரும்பதகாலம்” என்னலாம் படியிறே நடத்தி வந்தார்.

ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார் குமாரர்(பெரிய) சடகோபாசாரியார். இவர், திருத்தகப்பனாரிடம் காலக்ஷேபங்கள் கேட்டு அருளிச்செயல்களின் ஆழ்பொருள்களைத் தேர்ந்துரைத்தும், “ஈடுப்ராஸங்கிக ப்ரமாணத்திரட்டும்” அருளிச்செய்தார். பேரருளாளரிடம் பேசும் படியான ஏற்றம் பெற்ற ஸ்ரீதிருக்கச்சிநம்பியிடம் அபார ஈடுபாடுடையவராய் “திருக்கச்சிநம்பி சரிதம்” முதலானது அருளிச்செய்தார். “ராமாநுஜமுநேர் மான்யம்” என்று உடையவராலே மிகவும் போற்றப்பட்ட திருக்கச்சிநம்பிக்கு திருநகரியிலே உடையவரின் “ராமாநுஜ சதுர்வேதி மங்கலத்திலே” ஸந்நிதி வீதியிலே ஒரு ஸந்நிதியும் கட்டி ப்ரதிஷ்டிப்பித்து, உடையவரை ஆனந்திப்பித்தார். அப்போதிலிருந்து திருக்கச்சிநம்பிக்கு ஸ்வாமி ஆழ்வார் மங்களாசாஸனமும் ஏற்பட்டு நடந்து வருகின்றது.

இவர் குமாரர் குமாரசாடகோபாசாரியாருக்கு ஐந்து குமாரர்கள். ஜ்யேஷ்டர் அழகப்பிரானார்க்கு ஸந்ததியில்லை. அவர்காலத்துக்குப் பின்பு, தம்பிகள் நால்வரும் “உலகமேத்தும் தென்னானாய், வடவானாய், குடபாலானாய், குணபாலமதயானாய்” என்றாற்போலே நான்கு திருமாளிகைகள் ஏற்படுத்திக் கொண்டு ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யம் மற்றும் எம்பெருமான்கள் கைங்கர்யங்களையும் முறை வைத்து நிர்வஹித்துக் கொண்டு இன்றளவும் நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீமத் ஆத்தான் கீழத்திருமாளிகை ஸ்தாபிதம்

குமாரசடகோபாசாரியாருக்கு 5 குமாரர்கள்

  1. அழகப்பிரானார் – ஸந்ததியில்லை
  2. சடகோபாசாரியார் – கீழ(நமது) திருமாளிகை ஸ்தாபகர்
  3. ஸுந்தராசாரியார் – மேலத்திருமாளிகை ஸ்தாபகர்
  4. கெளஸ்துபாசாரியார் (எ) ராமாநுஜம் பிள்ளை – வடக்குத் திருமாளிகை ஸ்தாபகர்
  5. அப்பு வாசாரியார் – தெற்குத் திருமாளிகை ஸ்தாபகர்

தெற்குத் திருமாளிகை தற்போது ஸந்ததியின்றிப் போயிற்று. மீதி மூன்றில் நமது திருமாளிகை கீழத்திருமாளிகை. நால்வரில் ஜ்யேஷ்டராயிருந்த சடகோபாசாரியார் ஸ்வாமி ப்ராசீனமான(ஆதி) கீழத்திருமாளிகையில் எழுந்தருளியிருந்தார். ஒன்றான ராமாநுஜம் பிள்ளை இவ்வூருக்கு எழுந்தருளி அமைத்துக் கொண்டது இத்திருமாளிகை. பேரருளாளப் பெருமாள் இங்குதான் எழுந்தருளியிருந்து நித்யததீயாராதநாதிசயங்கள் அனைத்தழகும் கண்டருளுகிறார்.

சடகோபாசாரியார் ஞானாநுஷ்டானங்களில் மிக்கு, ஸ்வாமி ஆழ்வாரின் மறு அவதாரமோ என்னலாம்படி “வ்ருஷமாஸி விசாகாயாம் அவதீர்ணம் குணோஜ்வலம்” என்று வைகாசி விசாகத்திலே வந்தவதரித்து ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யங்களைக் குறைவின்றி நடத்தி வந்தார். இவர் குமாரர் ராகவாசாரியார்……. என்று வம்சபரம்பரை தொடர்ந்து வருகின்றது.

ஸ்ரீமத் ஆத்தான் கீழத்திருமாளிகை ஸ்வாமிகளின் தனியன், வாழித்திருநாமம்

ஸ்ரீ ஒன்றான ராமாநுஜம் பிள்ளை ஸ்வாமி

ஸ்ரீ ஒன்றான் ராமாநுஜம் பிள்ளை ஸ்வாமி

(பங்குனிபுனர்பூசம்)

நித்யத் தனியன்

வந்தேவானமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |

ராமாநுஜார்யம் ஸ்ர்வக்ஞம் வத்ஸாந்வய விபூஷணம் ||

திருநக்ஷத்ரதனியன்

உதிதம் பால்குநேமாஸி புநர்வஸ் வபியோடுநி |

வாத்ஸ்ய ராமாநுஜசார்யம் வந்தே ஸத்குணசாகரம் ||

சீர்

வாழி ராமாநுசம் பிள்ளை மாமலர்த்தாள்

வாழியவன் முடும்பை மாநகரம் வாழியே

அந்தமில் சீர் மாறன் மறைபொருளை அம்புவியோர்

சிந்தையுறத் தேந்துரைகும் சீர்.

வாழி திருநாமம்

எங்கள் மணவாளமுனி இணையடிகள் மறவாத ராமாநுச முநிபதம்

இதயத்தே வைத்தருள் முடும்பயர் குலாதிபன் இராமாநுசம் பிள்ளை தன்

பொங்குபுகழ் பொறை க்ருபை ஆசாரநீதிக்கு பொருளைப்புரைக்க வென்றால்

இவன் பூவனோ, அன்றிமாலோ, சேடனோ, அன்றி பூர்வர்களில் நம்பிள்ளையோ

அங்கமுடன் நான்மறைகள் தமிழ் செய்த ஆழ்வார்கள் அனைவருடைய ஆகாரமோ

ஆழ்கடலையனை செய்த அபிராம நீதிகதை அருள்செய்த வால்மீகியோ

தங்கு புகழோர் ததியதர்சனம் வாழவே தாரணியில் வந்துதித்தோன்

சத்யமதெத்திசையும் வீசுபுகழ் எதிராசர் தம்முடைய அவதாரமே

ஸ்ரீமத் ஆத்தான் ஸ்வாமி

ஸ்ரீமத் ஆத்தான் ஸ்வாமி

(ஆவணிசித்திரை)

நித்யத்தனியன்

ஸ்ரீராமாநுஜ யோகீந்த்ர பதபங்கஜ ஷட்பதம் |

ராமாநுஜார்ய தநயம் வதார்ய மஹம்பஜே ||

திருநக்ஷத்ரதனியன்

ஸிம்ஹே சித்ரோடுஸம்பூதம் வத்ஸவம்சாப்தி கௌஸ்துபம் |

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வரதாஹ்வய மாஸ்ரயே ||

சீர்

வாழி ஆத்தான் கமலவன் சரணம் வாழி முடும்பை

வாழியவன் அருள் கூர் வாள்விழிகள் –வாழியே

இராமாநுசம் பிள்ளை இன்னருளால் ஆழ்வார்

திராவிட நூல் தேர்ந்துரைகும் சீர்.

வாழித்திருநாமம்

தழுவு திருமார்பனுடன் தண்பதுமை சேணைமுதல்

சடகோபன் நாதமுநி தாள்தொழுவோன் வாழியே

வழுவில் புகழ் புண்டரீகக்கண்ணர் மணக்கால் நம்பி

வாழ் ஆளவந்தாரை வாழ்த்துமவன் வாழ்யே

அழகுடைய பெரிய நம்பி எதிராசர் அவரடிசேர்

அனைத்தாரியர் தங்கள் அருளுடையோன் வாழியே

எழிலுடைய இராமாநுசம் பிள்ளைக்கினியமைந்தன்

எங்கள் வரதாரியனார் இனிதூழி வாழியே.

x—————————————x—————————————x

பங்கயத் திருத்தாளினை வாழியே

பான்மதி திருவாடையும் வாழியே

அங்கமார் திருவுந்தியும் வாழியே

ஆரநூல் மணிமார்பும் வாழியே

சங்கு சக்கரத்தோளிணை வாழியே

தாமரைச் செந்திருமுகமும் வாழியே

மங்கலத் திருநாமம் வாழியே

வாழ்முடும்பை வராதாரியன் வாழியே

ஸ்ரீ ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார் ஸ்வாமி

ஸ்ரீ ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார் ஸ்வாமி

(சித்திரைதிருவோணம்)

நித்யத்தனியன்

வரதார்ய குரோபுத்ரம் தத்பதாப்ஜைக தாரகம் |

ஜ்ஞாநபக்த்யாதி ஜலதிம் வந்தே ஸுந்தரதேசிகம் ||

திருநக்ஷத்ரதனியன்

சைத்ரேச்ரவண நக்ஷத்ரே ஸ்ரீமத்வத்ஸ குலோத்பவம் |

வரதார்ய குரோசிஷ்யம் ஸுந்தரார்யம் ஸமாச்ரயே ||

சீர்

வாழி அழகப்பனருள் வாய்த்த திருவடிகள்

வாழி வரதாசாரியன் வாழ்மைந்தன் – வாழியே

சடகோபன் தண்டமிழைத் தாரணி யோர்க்கெல்லாம்

திடமாகவே உரைகும் சீர்.

வாழித்திருநாமம்

சீராரும் செங்கமலத் திருதாளிணை வாழியே

திருமுழுந்தாளும் குறங்கும் திருவரையும் வாழியே

பாராருந் திருவுந்திப் பட்டாடை வாழியே

பங்கயத்தார் உறைமார்பும் பணைப்புயமும் வாழியே

காராரும் திருக்குழலும் கழுத்தழகும் வாழியே

கருணைபொழி விழியும் காதிரண்டும் வாழியே

ஏராருந் திருநாசி இலங்கு முடி வாழியே

எங்கள் அழகப்பையங்கார் இனிதூழி வாழியே

தொங்கல்

மாலடியார் வாழமதிள் குருகூர் தான் வாழ

சீலமகு நம்மாழ்வார் சீர் வாழ –சாலவே

எந்நிலமும் போற்றும் எழில் அழகப்பாரியனே

இன்னுமொரு நூற்றாண்டிரும்.

ஸ்ரீ சடகோபாச்சார்யர் ஸ்வாமி

ஸ்ரீ சடகோபாச்சார்யர் ஸ்வாமி

(ஆவணிபூசம்)

நித்யத்தனியன்

ஸுந்தரார்ய பதாம் போஜ த்வம்த்வ ப்ரவணமாநஸம் |

தத்ஸூநும் சடகோபார்யம் ஷட்குணாட்ய மஹம்பஜே ||

திருநக்ஷரத்தனியன்

ஸிம்ஹேபுஷ்யர்க்ஷ ஸஞ்ஜாதம் வத்ஸவம்ஸ விபூஷணம் |

ஸுந்தரார்ய குரோசிஷ்யம் சடகோப குரும்பஜே ||

சீர்

வாழி சடகோபாரியன் தன் மாமலர்த்தாள்

வாழியவன் அமுதவாய் மொழிகள் வாழியே

எந்தை அழகப்பன் இன்னருளால் மாறனிசைச்

செந்தமிழைத் தேர்ந்துரைகும் சீர்.

வாழித்திருநாமம்

சந்ததமும் மகிழ் மாறன் சரண் பணிவோன் வாழியே

சதுமறையின் பொருளனைதும் தந்தருள்வோன் வாழியே

அந்தணர்கோன் அழகப்பன் அடிபணிவோன் வாழியே

ஆவணியிற் பூசத்தில் அவதரித்தான் வாழியே

செந்தமிழ்சேர் ஆத்தானைச் சிந்தை செய்வோன் வாழியே

திருவாய் மொழிப்பொருளைத் தேர்ந்துரைப்போன் வாழியே

இந்த உலகத்தோர்க் கிதமுரைப்போன் வாழியே

எழில் சடகோபாரியன் இணையடிகள் வாழியே.

ஸ்ரீ குமார சடகோபாசாரியர் ஸ்வாமி

ஸ்ரீ குமார சடகோபாசாரியர் ஸ்வாமி

(மாசிபுனர்பூசம்)

நித்யத்தனியன்

சடகோசார்ய பாதாப்ஜே ஸதாஸம் ஸக்த மாநஸம் |

தத்ஸூநும் தத்க்ருபாபாத்ரம் ஸடாரிகுருமாஸ்ரயே ||

திருநக்ஷத்ரதனியன்

குமார சடகோபார்யம் சடகோப குரோ ஸுதம் |

கும்பமாஸி புநர்வஸ்வோர் ஜாதம் வாத்ஸ்யம் ஸமாஸ்ரயே ||

சீர்

வாழி குமார சடகோபன் வண்குரவன்

வாழி அம்புயத்தாள் வாய்மொழிகள் – வாழியே

குருவான சடகோபக் கொண்டல் அருளாலே

திருவாய்மொழியுரைக்கும் சீர்

வாழித்திருநாமம்

மாசிதனில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே

வண் சடகோபாரியன் மைந்தனென்றும் வாழியே

காசியினில் ஞானியர்கள் கருத்தருள்வோன் வாழியே

கடி கமழும் மகிழ்மாறன் கழல் பணிவோன் வாழியே

தேசிகர்கோன் ஆத்தானைச் சிந்தை செய்வோன் வாழியே

திருவாய்மொழிப் பொருளைத் தெரிந்துரைப்போன் வாழியே

ஆசருசீர் பாடிய நூல் ஆய்ந்துரைப்போன் வாழியே

அணி சடகோபாரியன் அம்புவியில் வாழியே

ஸ்ரீ அழகப்பிரானார் ஸ்வாமி

ஸ்ரீ அழகப்பிரானார் ஸ்வாமி

(பங்குனிஅநுஷம்)

நித்யத்தனியன்

வாத்ஸ்ய ஸ்ரீ சடகோபார்ய தநயம் விநயோஜ்வலம் |

வாத்ஸல்யாதி குணாவாஸம் வந்தே வேங்கட தேசிகம் ||

திருநக்ஷத்ரதனியன்

குமார சடகோபார்ய ஸூநும் ஸுந்தரதேசிகம் |

பால்குநே மாஸ்யநூராத ஜாதம் வாத்ஸ்யம் ஸமாச்ரயே ||

சீர்

வாழி அழகப்பிரான் என்னும் வண்குரவன்

வாழியவன் முந்நூல் மணிமார்பும் வாழியே

மெய்யன் குமார சடகோப தேசிகன் போல்

செய்ய தமிழ் ஈடுரைக்கும் சீர்

வாழித்திருநாமம்

சீருலவும் திருக்குருகூர் சிறக்கவந்தோன் வாழியே

திருமகிழ்தார் மாறந்தாள் சிந்தை வைப்போன் வாழியே

பாருலவு தொண்டரென்றும் பரவநின்றோன் வாழியே

பங்குனியில் அனுடத்தில் பாருதித்தோன் வாழியே

ஆரவெழில் புகழ் ஆத்தான் அடிதுதிப்போன் வாழியே

அழகப்பையங்கார் சடகோபன்தாள் தொழுவோன் வாழியே

எழில் அழகப்பிரானார் தாள் இனிதூழி வாழியே.

ஸ்ரீ சடகோபாசார்யர் ஸ்வாமி

ஸ்ரீ சடகோபாசார்யர் ஸ்வாமி

(வைகாசிவிசாகம்)

(ஸ்ரீமத் ஆத்தான் கீழத்திருமாளிகை முதல் பட்டம் )

நித்யத்தனியன்

வாத்ஸ்யஸ்ரீ சடகோபார்ய பௌத்ரம் தந்நாமகம் குரும் |

சடாரி குரு பாதாப்ஜே ப்ரவணம் சாந்தமாச்ரயே ||

திருநக்ஷத்ரதனியன்

வ்ருஷமாஸி விசாகாயாம் அவதீர்ணம் குணோஜ் வலம் |

ஸுந்தரார்ய குரோசிஷ்யம் சடகோப குரும்பஜே ||

சீர்

வாழி சடகோப தேசிகன் வண்குரவன்

வாழியவன் இனிய வாய்மொழிகள் வாழியே

வள்ளல் அழகப்பிரான் இன்னருளால் மாறனிசை

தெள்ளு தமிழ் ஈடுரைகும் சீர்.

வாழித்திருநாமம்

தண்டமிழோர் புகழ்க்குருகை தழைக்கவந்தோன் வாழியே

சடகோபாரியன் பொற்றாள் பணிந்துய்ந்தோன் வாழியே

தொண்டர்கள் ஈடேறவந்து தோன்றினான் வாழியே

சுருதி மறைப்பொருளனைத்தும் தொகுத்துரைப்போன் வாழியே

எண் டிசையும் புகழ் முடும்பைக் கிறைவனார் வாழியே

எதிராசர் எனப்புவியில் ஏற்ற முள்ளோன் வாழியே

கொண்டல் என நிதிமாரி கொழிக்க வந்தோன் வாழியே

குரு சடகோபாரியன் தாள் கோகனகம் வாழியே.

ஸ்ரீ இராகவாசாரியர் ஸ்வாமி

ஸ்ரீ இராகவாச்சாரியர் ஸ்வாமி

(ஆடிபூசம்)

நித்யதனியன்

ஸ்ரீவாத்ஸ்ய வேங்கடாசார்ய சிஷ்யம் சடாரிபோஸுதம் |

ப்ரபத்யே ராகவாசார்யம் ஜ்ஞாநாதி குணசாகரம் ||

திருநக்ஷரதனியன்

கர்க்கடே புஷ்ய நக்ஷத்ரே ஜாதம் வாத்ஸ்யம் குணைர்யுதா |

ஸுந்தரார்ய குரோசிஷ்யம் ராகவார்யம் அஹம்பஜே ||

சீர்

வாழி இராகவாரியன் தன் மாமலர்த்தாள்

வாழியவன் இன்சொல் அருள்வாழ்வதநம் – வாழியே

நம் அழகப்பையங்கார் நல்லருளால் நம்மாழ்வார்

தென் மொழிநூல் தேர்ந்துரைகும் சீர்.

வாழித்திருநாமம்

திருவாடிப் பூசத்தில் ஜகத்துதித்தான் வாழியே

திருக்குருகை மாநகரம் சிறக்கவந்தோன் வாழியே

அருளாளர் தமைப்போற்றி ஆதரிப்போன் வாழியே

அழகப்பிரானார் பொன்னடி தொழுவோன் வாழியே

மருவாரும் மகிழ்மாறன் வளமுரைப்போன் வாழியே

வண்சடகோபாரியன் வரக்குமரன் வாழியே

இருள்மாயப் பிறப்பிலென்னை எடுத்தளிப்போன் வாழியே

இராகவ தேசிகவாரியன் இணையடிகள் வாழியே

தொங்கல்

திருவாய்மொழி வாழ தேசிகர்கள் வாழ

மருவாரும் தென்முடும்பை வாழ – குருகூரில்

இந்துணைவன் வாழ இராகவாரியனே

இன்னுமொரு நூற்றாண்டிரும்

ஸ்ரீ (ஐயா) சடகோபாசார்யர் ஸ்வாமி

ஸ்ரீ (ஐயா) சடகோபாசார்யர் ஸ்வாமி

(தை மூலம்)

நித்யத்தனியன்

வாத்ஸ்ய ஸ்ரீசடகோபார்ய பௌத்ரம் ஷட்குணவாரிதிம் |

ராகவார்ய குரோபுத்ரம் சடகோப குரும்பஜே ||

திருநக்ஷத்ரதனியன்

ராகவார்ய குரோசிஷ்யம் வாத்ஸ்யம்சடரிபும் குரும் |

மகரே மூலநக்ஷத்ரே ஜாதம் குணநிதிம் பஜே ||

சீர்

வாழி சடகோபாரியன் எனும் வண்குரவன்

வாழியவன் அமுதவாய் மொழிகள் – வாழியே

தந்தை எழில் சடகோப தேசிகனருளால் மாறனிசைச்

செந்தமிழைத் தேர்ந்துரைகும் சீர்.

வாழித்திருநாமம்

சீர் மேவுந் தெங்குருகூர் செழிக்க வந்தோன் வாழியே

செந்தமிழ் வேதப்பொருளைத் தெளிந்துரைப்பேன் வாழியே

ஏர்மேவுந்தையில் மூலத்து இங்குதிதான் வாழியே

இராகவ தேசிகவாரியன் இனியமைந்தன் வாழியே

பார்மேவும் அருளாளர் பதம்பணிவோன் வாழியே

பாடியதினுட்பொருளைப் பகர்ந்துரைபோன் வாழியே

தர்மேவு திருமார்பும் தடம்புயமும் வாழியே

சடகோப தேசிகரடி தாரணியில் வாழியே

ஸ்ரீ (சித்தண்ணா) சடகோபாசார்யார் ஸ்வாமி

ஸ்ரீ (சித்தண்ணா) சடகோபாசார்யார் ஸ்வாமி

(ஐப்பசிஆயில்யம்)

நித்யத்தனியன்

நப்தாரம் சடகோபஸ்ய பௌத்ரம் ராகவஸத்குரோ: |

புத்ரம் சடரி போச்சிஷ்யம் சடகோபகுரும்பஜே ||

திருநக்ஷத்ரதனியன்

ஆச்லே ஷாஸு துலாமாஸே ஜாதம் வத்ஸவிபூஷணம் |

சடகோப குரோ சிஷ்யம் சடகோப குரும்பஜே ||

சீர்

வாழி சடகோபாரியன் தன் மாமலர்த்தாள்

வாழியவன் அருள்கூர் வாய்மொழிகள் – வாழியே

வள்ளல் சடகோபாரியன்பால் மாறன்

தெள்ளு தமிழ் ஈடுரைக்கும் சீர்.

வாழித்திருநாமம்

ஐப்பசியில் ஆயில்யத்து அவதரித்தோன் வாழியே

அருளாளர்க்கு ஆராதனை செய்துகந்தோன் வாழியே

எப்புவியும் ததீயர்கட்கு ஈடளிப்போன் வாழியே

எழில் சடகோபாரியன் இணையடியோன் வாழியே

முப்புரிநூல் மணிமார்பில் மின்னுமவன் வாழியே

மூவுலகும் புகழ்முடும்பைக் குலத்துதித்தோன் வாழியே

எப்பொழுதும் சீர் பாடியும் ஈந்தருள்வோன் வாழியே

எங்கள் சடகோபதேசிகன் இணையடிகள் வாழியே

ஸ்ரீ குமார சடகோபாசார்யர் ஸ்வாமி

ஸ்ரீ குமார சடகோபாசார்யர் ஸ்வாமி

(ஆனிமகம்)

நித்யத்தனியன்

ஸ்ரீவாத்ஸ்ய சடகோபார்ய பௌத்ரம் தத்பாத ஸம்ச்ரயம் |

சடகோபார்ய ஸத்புத்ரம் ஸ்ரீசடாரி குரும்பஜே ||

திருநக்ஷரதனியன்

மகாஸுமிதுநே ஜாதம் சடகோப குரோஸ்ஸுதம் |

குமார சடகோபார்யம் வத்ஸவம்ஸ்யம் ஸமாஸ்ரயே ||

சீர்

வாழி குமார சடகோபாரியன் மாமலர்தாள்

வாழி முடும்பை மாநகரம் வாழியே –

சடகோபாரியன் இன்னருளால் மாறன் மறைப்பொருளை

திடமாக எடுத்துரைகும் சீர்.

வாழித்திருநாமம்

தெந்திருமால் குருகை தனில் திகழவந்தோன் வாழியே

தேசிகருக்குத் தத்துவநூல் தேர்ந்துரைப்போன் வாழியே

சந்ததமும் கவிவிடை நூல் சதமுரைப்போன் வாழியே

சடகோப குருவுக்குச் சந்த்தியோன் வாழியே

அந்தமில்சீர் அருள் மாரியை ஆதரிப்போன் வாழியே

ஆனி மகத்தம்புவியில் அவதரித்தோன் வாழியே

சந்திகளைப்பொருத்துவிக்கும் ஸத்புருடன் வாழியே

சடகோபாசார்யரடி சந்ததமும் வாழியே.

ஸ்ரீ இராகவாசார்யர் ஸ்வாமி

ஸ்ரீ இராகவாசார்யர் ஸ்வாமி

(ஆடிபூரம்)

நித்யத்தனியன்

குமார சடகோபார்ய பாதபத்ம மதுவ்ரதம் |

தத்ஸூநும் சாஸ்த்ரதத்வக்ஞம் ராகவாசார்யமாஸ்ரயே ||

திருநக்ஷத்ரதனியன்

கர்க்கடே பூர்வபல்குந்யாம் ஜாதம் வத்ஸாப்தி கௌஸ்துபம் |

குமார சடகோபார்யஸூதம் ராகவம் ஆஸ்ரயே ||

சீர்

வாழி இராகவாரியன் தன் மாமலர்த்தாள்

வாழியவன் இன்சொலருள் வாழி முடும்பை வாழியே

தந்தை சடகோப தேசிகனருளால் மாறன்

தென்தமிழ் ஈடுரைக்கும் சீர்

வாழித்திருநாமம்

பார்புகழும் மகிழ்மாறமன் பதம்பணிவோன் வாழியே

பாடியத்தின் உட்பொருளைப் பகர்ந்தருள்வோன் வாழியே

சீருலவு லோககுரு மொழிமகிழ்வோன் வாழியே

சிந்தையினால் வரயோகி வசனத்தோன் வாழியே

ஏருணர்வு குமார சடகோபன் அடிதுதிப்போன் வாழியே

எழிலமர்ந்த அடியவர்கட்கு இதமுரைப்போன் வாழியே

ஆடிதனில் திருப்பூரத்து அவதரித்தோன் வாழியே

அருளமர்ந்த இராகவாரியன் அடியிணைகள் வாழியே.

ஸ்ரீ வேங்கடாசாரியார் ஸ்வாமி

ஸ்ரீ வேங்கடாசாரியார் ஸ்வாமி

(ஆனிஉத்ரம்)

நித்யத்தனியன்

குமார சடகோபார்ய பௌத்ரம் தத்பாதஸம்ச்ரயம் |

வரதார்ய க்ருபாபாத்ரம் வேங்கடார்யம் அஹம்பஜே ||

திருநக்ஷத்ரதனியன்

மிது நோத்தர பல்குந்யாம் வத்ஸவம்ஸ ஸமுத்பவம் |

ராகவார்ய குரோஸூநும் வேங்கடார்யம் அஹம்புஜே ||

சீர்

வாழி அருள் வேங்கடேசன் மாமலர்த்தாள்

வாழி அவன் இனிய வாய்மொழிகள் – வாழியே

வாழ்புகழ் மால்வரதமால் அருளால் மாறன் திருவாய்

மொழிப்பொருளை ஆய்ந்துரைக்கும் சீர்.

வாழித்திருநாமம்

சீர் மருவுங்குருகை நகர் சிறக்கவந்தோன் வாழியே

திகழ் வரதகுருவின் அருள் சேருமவன் வாழியே

வாரமுடன் ஈடுபாடியம் வகுத்துரைப்போன் வாழியே

வளர் ஆனி உத்திரத்தில் வந்துதித்தான் வாழியே

தாரணியில் அருளாளர் தாள் தொழுவோன் வாழியே

சடகோபகுருவை மனம் தரித்தருள்வோன் வாழியே

ஏருலவு இராகவகுருவுக்கு இனியமைந்தன் வாழியே

எழில்முடும்பை வேங்கடாரியன் இணையடிகள் வாழியே

ஸ்ரீ அழகப்பையங்கார் ஸ்வாமி

ஸ்ரீ அழகப்பையங்கார் ஸ்வாமி

(ஐப்பசிஉத்தரம்)

நித்யத்தனியன்

ஸ்ரீவாத்ஸ்ய வேங்கடாசார்ய தநயம் தத்பதாச்ரயம் |

தேவராஜ க்ருபா பாத்ரம் வந்தே ஸுந்தர தேசிகம் ||

திருநக்ஷரதனியன்

ஆச்வீநோத்தர பல்குந்யாம் அவதீர்ணம் மஹீதலே |

வேங்கடார்ய ஸுதம் வாத்ஸ்யம் வந்தே ஸுந்தரதேசிகம் ||

சீர்

வாழி வேங்கடாரியன் மைந்தன் அழகப்பாரியன்

வாழ்யவன் சீர்முகமும் வாய்மொழியும் – வாழியே

எந்தையெழில் தேவபிரான்  இன்னருளால் மண்டலத்துச்

செந்தமிழைத் தேர்ந்துரைகும் சீர்.

வாழித்திருநாமம்

செம்பொன் மதிள் குருகை நகர் சிறக்க வந்தோன் வாழியே

தேவராச குருவருளால் தெளிந்த சித்தன் வாழியே

அன்புடனே வேங்கடேசன் அடிதொழுவோன் வாழியே

ஐப்பசியில் உத்திரத்தில் அவதரித்தான் வாழியே

உம்பர் புகழ் ஈடணைத்தும் உரைத்தருள்வோன் வாழியே

உயர் அருளாளருக்கு அடிமை உகந்து செய்வோன் வாழியே

நன்பதின்மர் கலைப்பொருளை நவின்றுரைப்போன் வாழியே

நன் முடும்பை சுந்தராரியன் நல்லடிகள் வழியே.

தொங்கல்

தென்குருகை வாழத் திருவாய்மொழிவாழ

வண்புகழ்சேர் மாறனருள் தாம் வாழ – நன்புவியில்

இந்தமிழ்கள் ஈடளிக்கும் எழில் அழகப்பாரியனே

இன்னுமொரு நூற்றாண்டிரும்

ஸ்ரீ சடகோபாசார்யர் ஸ்வாமி

ஸ்ரீ சடகோபாசார்யர் ஸ்வாமி

(ஆடிசதயம்)

நித்யத்தனியன்

ஸ்ரீவாத்ஸ்ய வரதாசார்ய பாதபத்ம மதுவ்ரதம் |

சடகோப குரும் வந்தேஜ்ஞானபக்த்யாதி வாரிதிம் ||

திருநக்ஷத்ரதனியன்

சதபிஷகபியர்க்ஷே கர்க்கடே மாஸிஜாதம்

சடரிபுகுரு வர்யம் ஸம்ச்ரயே வத்ஸவம்ஸ்யம் |

வரதகுரு பாதாப்ஜே பக்தியுக்தம் வரேண்யம்

ஸுபகுணநிதி சயாநாம் ஸேவிதம் தேசிகேந்த்ரம் ||

சீர்

வாழி சடகோபன் மாமலர்த்தாள்

வாழியவன் செங்கமலக் கண்ணிணை – வாழியே

தந்தை வரதாரியன் இன்னருளால் திருவாய்மொழிப்

பொருளைத் தேர்ந்துரைக்கும் சீர்.

வாழித்திருநாமம்

சீர்பெருகும் குருகைநகர் சிறக்கவந்தோன் வாழியே

திருவாடிச் சதயத்தில் சகத்துதித்தான் வாழியே

பார்புகழும் பாடியத்தை பரிந்துரைப்போன் வாழியே

பராங்குசன் தன் பாவதனைப் பகருமவன் வாழியே

தார்மருவும் அருளாளர் தாள் தொழுவோன் வாழியே

தந்தை வரதாரியன் தன் சரண்பணிவோன் வாழியே

ஏர்மருவும் முடும்பைநகர் இலங்கவந்தோன் வாழியே

எழில் சடகோபாரியன் இணையடிகள் வாழியே

ஸ்ரீ வேங்கடாசார்யர் ஸ்வாமி

ஸ்ரீ வேங்கடாசார்யர் ஸ்வாமி

(ஐப்பசிபூராடம்)

நித்யத்தனியன்

ஸ்ரீமத்வத்ஸ குலோத்பவம் குணநிதிம் ஸ்ரீசுந்தரார்யாத்மஜம்

தத்பாதத்வய பக்திலப்த விலஸத் வேதாந்தயுக்ம ஸ்ரீயம் |

நித்யம் ஸ்ரீசடகோப பக்தமநகம் தீநாத்மஸஞ்ஜீவநம்

வந்தே ஸ்ரீவரதாங்க்ரி பத்மநிரதம் ஸ்ரீவேங்கடார்யம் குரும் ||

திருநக்ஷத்ரத்தனியன்

பூர்வாஷாடாஸு ஸஞ்ஜாதாம் துலாயாம் வாத்ஸ்ய மாச்ரயே |

ஸுந்தரார்ய குரோசிஷ்யம் வேங்கடாசார்ய தேசிகம் ||

சீர்

வாழி அழகப்பன் மாமலர்தாள் போற்றும்

வாழியருள் வேங்கடாரியன் வண்சரணம் – வாழியே

மாறன் மறைபொருளை வையகத்தோர் வாழ்வென்னும்

வளமுறவே ஆய்துரைகும் சீர்.

வாழித்திருநாமம்

ஐப்பசியில் பூராடத்து அவதரித்தான் வாழியே

அழகாரும் குருகை நகர் அமர்ந்த செல்வன் வாழியே

எப்புவியும் ததீயர்கட்கு ஈடளிப்போன் வாழியே

எழில் அழகப்பாரியன் தாள் இறைஞ்சுமவன் வாழியே

அற்புதமாம் சீர்பாடியும் ஆய்ந்துரைபோன் வாழியே

அநவரதம் அருளாளருக்கு அடிமை செய்வோன் வாழியே

மூதுவர்கள் புகழ் முடும்பை குலத்துதித்தோன் வாழியே

மூதரிய வேங்கடாரியன் மொய்க்கழல்கள் வாழியே

தொங்கல்

தேசிகர்கள் வாழத்தென் முடும்பைதான் வாழ

மாசருசீர் மாறனருள் தான் வாழ – நேசமுடன்

மன்னுகுருகைநகர் வாழ் வேங்கடாரியனே

இன்னுமொரு நூற்றாண்டிரும்.

ஸ்ரீ வரதாசார்யர் ஸ்வாமி

ஸ்ரீ வரதாசார்யர் ஸ்வாமி

(கார்த்திகைஉத்திரட்டாதி)

நித்யத்தனியன்

வேங்கடார்ய குரோஸூநும் சடகோப பதாச்ரயே |

வரதார்ய க்ருபாபாத்ரம் வந்தே வரததேசிகம் ||

திருநக்ஷத்ரத்தனியன்

உத்தர ப்ரோஷ்ட பதத்தாரே வ்ருச்சிகே வத்ஸவம்ஸஜ |

சடகோப குரோசிஷ்யம் வரதார்ய குரும்பஜே ||

சீர்

வாழி சடகோப வள்ளல் மலரடிக்கீழ்

வாழும் வரதகுரு மண்ணுலகில் – வாழியவன்

மாறன் மறைத்தமிழை மாநிலத்தோர் தாம் வாழத்

தேறும்படி உரைகும் சீர்

வாழித்திருநாமம்

சீராரும் குருகை நகர் சிறக்க வந்தோன் வாழியே

திகழ் கார்த்திகையுத்திரட்டாதி உதித்தவள்ளல் வாழியே

ஏராரும் வேங்கடாரியருக்கு இனியமைந்தன் வாழியே

எழில் சடகோபகுரு இணையடியோன் வாழியே

பாராரும் அருளாளர் அடிபணிந்துயந்தோன் வாழியே

பரிவுடனே கோதை கண்ணண் பதம் பணிவோன் வாழியே

ஏராரும் அப்புவாரியன் இன்னருளோன் வாழியே

எழில் முடும்பை வரதாரியன் இணையடிகள் வாழியே

தொங்கல்

தென் முடும்பை வாழத் திருவாய்மொழி வாழ

மன்னுபுகழ் தென்குருகை மால்வாழ – தன்னடியார்

இன்னல் தவிர்க்கும் எழில் வரததேசிகனே

இன்னுமொரு நூற்றாண்டிரும்.

ஸ்ரீ வேங்கடாசார்யர் ஸ்வாமி (போத்தி ஸ்வாமி)

ஸ்ரீ வேங்கடாசார்யர் ஸ்வாமி (போத்தி ஸ்வாமி)

(ஆடிமகம்)

நித்யத்தனியன்

ஸ்ரீவாத்ஸ்ய வரதாசார்ய தநயம் தத்பதாத்ரயம் |

வரதார்ய க்ருபா பாத்ரம் வந்தே வேங்கடதேசிகம் ||

வேங்கடார்ய குரோ: பௌத்ரம் ஸ்ரீவத்ஸகுல பூஷணம் |

வரதார்ய குரோ: புத்ரம் வேங்கடார்ய மஹம் பஜே ||

திருநக்ஷத்ரத்தனியன்

மஹாஸுகர்க்கடே ஜாதம் வேங்கடாசார்ய நாமகம் |

வரதார்ய குரோ: புத்ரம் வத்ஸவம்ஸ்யம் நமாமிதம் ||

சீர்

வாழி வரதாரியனடி பரவும் வாழியருள் வேங்கடவன்

வண்சரணம் வாழி முடும்பை வாழியே

நம் வரதகுரு நல்லருளால் நாவீரன்

நற்கலையை நமக்குரைக்கும் சீர்.

வாழித்திருநாமம்

ஆடிமகத்தம்புவியில் அவதரித்தோன் வாழியே

ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே

சீர்பெருகும் கோதை பதம் தினந்தொழுவோன் வாழியே

சேமங்கொள் தென்குருகூர் சிறக்கவந்தோன் வாழியே

பார்புகழும் வரதாரிய்ன் இருபதத்தோன் வாழியே

பாங்குடனே அருளாளர் பதம் பணிவோன் வாழியே

ஏர் வரததேசிகன் இன்னருளோன் வாழியே

எழில் முடும்பை வேங்கடாரியன் இணையடிகள் வாழியே

தொங்கல்

தேசிகர்கள் வாழ திருவாய்மொழி வாழ

மாசில்புகழ் முடும்பை நகர்தாம் வாழ – தேசுமிகு

வரதாரியன் தாள் பணியும் எழில் வேங்கடாரியனே

இன்னுமொரு நூற்றாண்டிரும்.

ஸ்ரீ வரததேசிகஸ்வாமி

ஸ்ரீ வரததேசிக ஸ்வாமி

(மார்கழிமகம்)

நித்யத்தனியன்

வாத்ஸ்ய ஸ்ரீவேங்கடாசார்ய தநயம் தத்பதாஸ்ரயம் |

வரதார்ய குரோ: பௌத்ரம் வரதார்ய குரும்பஜே ||

திருநக்ஷத்ரத்தனியன்

தநுர்மாஸே மகேஜாதம் வரதேசிக நாமகம் |

வேங்கடார்ய குரோ: புத்ரம் வரதகுருமாஸ்ரயே ||

சீர்

வாழி முடும்பை வரததேசிகன் மலரடிகள்

வாழியவன் பவளவாய் மொழிகள் – வாழியே

எந்தை வேங்கடாரியன் இன்னருளால் மாறன்

செந்தமிழைத் தேர்ந்துரைக்கும் சீர்

வாழித்திருநாமம்

வண்டினஞ்சூழ் குருகைநகர் வாழவந்தோன் வாழியே

வளர் தநுர் மகந்தன்னில் வந்துதித்தான் வாழியே

செண்டுலவு கோதை பதம் சிந்தை செய்வோன் வாழியே

சீர் அருளாளர் தாள் தினந்தொழுவோன் வாழியே

பண்டைய நான்மறைகள்தமைப் பகர்ந்துரைப்போன் வாழியே

பரிவுடனே ஆழ்வார்கள் பதம்பணிவோன் வாழியே

வண்மைமிகு வேங்கடாரியன் நல்ல மைந்தன் வாழியே

நன் முடும்பை வரதாரியன் நல்லடிகள் வாழியே

ஸ்ரீ சுதர்சன ராமாநுஜாசார்யார் ஸ்வாமி (வர்த்தமான ஸ்வாமி)

ஸ்ரீ சுதர்சன ராமாநுஜாசார்யார் ஸ்வாமி (வர்த்தமான ஸ்வாமி)

(ஐப்பசிமகம்)

நித்யத்தனியன்

வாத்ஸ்ய வரதார்ய புத்ரம் தத்பதாம் போஜத்விரேபம் |

வேங்கடார்ய க்ருபா பாத்ரம் ராமாநுஜ குரும்பஜே ||

திருநக்ஷத்ரத்தனியன்

துலாமகாயாம் ஸஞ்ஜாதம் நளாப்தே இந்து வாஸரே |

வரதார்ய குரோ: புத்ரம் ராமாநுஜ மஹம் ஆஸ்ரயே ||

சீர்

வாழி எழில் இராமநுசார்யன் மலர்ப்பதங்கள்

வாழி முடும்பையென்னும் மாநகரம் – வாழியே

குருவரததேசிக வேங்கவனின்னருளால்

திருவாய்மொழிப் பொருளுரைக்கும் சீர்.

வாழித்திருநாமம்

குன்றமுயர் மணிமாடக் குருகைவந்தோன் வாழியே

குவலயத்தில் ஐப்பசியில் மகத்துதித்தோன் வாழியே

அன்னவயல் புதுவை ஆண்டாள் அடிதொழுவோன் வாழியே

அருளாளர்க்கு அடிமை செய்து அகமகிழ்வோன் வாழியே

மன்னு புகழ் வரதாரியர் மகிழ்மைந்தன் வாழியே

மால்வேங்கடவரதனருள் விரும்புமவன் வாழியே

இன்னிசைத் தமிழ்மறைகள் இயம்புமவன் வாழியே

எழில் முடும்பை இராமாநுசன் இனிதூழி வாழியே !!

Sishyas Registration

Dear Sishyas of Srimath Aathaan Keezha Thirumaazhigai,

Please register the details of all family members who are our Thirumaazhigai Sishyas in the following link (Fill new form for each member)

Registration Link