ஸ்ரீவைஷ்ணவ உத்ஸவங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

namperumal-garudanஸ்ரீ ரங்கநாதன் – கருட ஸேவை

உத்ஸவம் என்பது பொதுவாக விழாக்கள் அல்லது மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் என்று பொருள்படும். திவ்ய தேசங்களிலும், அபிமான ஸ்தலங்களிலும், ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் அவதார ஸ்தலங்களிலும் ஆண்டு முழுவதும் பல உத்ஸவங்கள் கொண்டாடப் படுகின்றன.

எம்பெருமான் ஐந்து நிலைகளில் தோன்றுகிறான்: பரம், வ்யூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி என. (http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-parathvadhi.html பார்க்கவும்). இவற்றுள் அர்ச்சாவதாரம் மிகக் கருணையுள்ளதாகக் கருதப்படுகிறது. எம்பெருமான் தானே விரும்பி வெவ்வேறு வடிவங்களில் திவ்ய தேசங்கள், மடங்கள், இல்லங்களில் வந்து வசிக்கிறான். அவ்வாறு செய்யும்போது தான் வசிக்கும் இடங்களில் முழுக்க முழுக்க அடியார்களின் உதவியினாலேயே தன் திருமஞ்சனம், உணவு, உடை, உறக்கம் யாவற்றையும் அவர்கள் விரும்பியபடியே வைத்து அவற்றில் அவர்கள் மீது சார்பான நிலையில் ஸ்வாதந்த்ரியம் இன்றி தான் பரதந்த்ரன் போல் அமைத்துக் கொள்கிறான்.

ஸம்ஸாரத்தில் ஒவ்வொருவரையும் கைகொடுத்து மேல்நிலைக்கு எடுத்துச் செல்ல எம்பெருமானும் தாயாரும் பல வியத்தகு நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள். தன்னை மையமாக வைத்துப் பல நிகழ்ச்சிகளின் மூலம் திருவிழாக்களில் எம்பெருமான் அன்பர்களை உலகியலில் இருந்து சிறிது சிறிதாக மனம் மாற்றி, தன் பால் ஈடுபாடும் உலக சுகங்களில் பாராமுகமும் ஏற்படச் செய்கிறான். இதுவே எம்பெருமானின் உத்ஸவங்களின் நோக்கமாகும்.

வைணவக் கோயில்களில் நடக்கும் உத்ஸவங்களைப் பற்றிச் சுருக்கமாக உரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.வைணவ ஆலயங்களில் உத்ஸவங்கள் திவ்ய ப்ரபந்த வேத பாராயணங்களை உள்ளடக்கியே ஏற்படுத்தப் பட்டுள்ளன (இப்போது வேத பாராயணம் குறைந்து வருவது வருந்தத்  தக்கது). சில கோயில்களில் உத்ஸவங்களில் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் முழுவதும், சில இடங்களில் திருவாய்மொழி ஆயிரமும் திருவீதிப் புறப்பாடுகளில் இயற்பாவும் ஓதப்படுகிறது.

 • ப்ரஹ்மோத்ஸவம்
  • கோயிலின் ப்ரதானப் பெருமாளுக்கு நடப்பது ப்ரஹ்மோத்ஸவம். பொதுவாக இது கோயிலில் முதலில் நடந்த உத்ஸவம் பிரம்மனால் நடத்தப்பட்டதைக் குறிக்கும். கோயிலின் மூலவர் ப்ரதிஷ்டையையும் குறிக்கும். பொதுவாக இவ்வுத்ஸவத்தில் காலை மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகள் இருக்கும்.
  • அங்குரார்ப்பணம் – உத்ஸவம் தொடங்குவதைக் குறிக்க , புனிதப்படுத்திய மண்ணில் விதைகளை ஊன்றி முளைக்கவிட்டு அங்குரார்ப்பணம் செய்தல். சேனை முதலியார் புறப்பாடு உத்ஸவம் தொடங்கும்முன் விஷ்வக்ஸேநர் பெருமாள் திருவீதி புறப்பாட்டுக்கு முன் சென்று தெருக்கள் சரியாக தூய்மையாக உள்ளனவா என்று பார்த்தல்.
  • த்வஜாரோஹணம் – கொடி ஏற்றம்: – முதல் நாள் கருடக் கொடி கொடிக்க கம்பத்தில் ஏற்றி, உத்ஸவம் முடியும்வரை பறக்க விடப்படுகிறது.
  • கருட வாஹனம் – மூன்றாம் அல்லது நான்காம் அல்லது ஐந்தாம் நாள் தேச ஆசாரப்படி கருடவாஹனம் புறப்பாடு நடக்கிறது. கருடன்மீது ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளுவதால் , வேத ஸ்வரூபியாகிய கருட வாஹனம் முக்கியமான திருவிழா.
  • ரதோத்ஸவம் – திருத்தேர். இது ஏழு அல்லது எட்டு அல்லது ஒன்பதாம் நாள் தேச ஆசாரப்படி நடக்கிறது. எல்லா இலக்கியங்களிலும் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாகப் பேசப்படுகிறது. எம்பெருமானின் திருத்தேர் புறப்பாடு கண்டவர்கள் பிறவிப்பாவங்களிலிருந்து விடுபடுவதாக நம்பப்படுகிறது. முழுச் சமுதாயமும் தேர்த் திருவிழாவில் ஈடுபடுகிறது.
  • குதிரை வாஹனம் – வேடுபறி உத்ஸவம்
   • வேடு – வேட்டை ஆடுவது, துணி எனப் பொருள்படும். பறி – கொள்ளை/பறித்தல். பொதுவாக இது திருமங்கை ஆழ்வார் தொடர்பான விழா. அவர், பணக்கார ப்ராமணத் திருமணமகனாக வந்த பெருமாளை அடியார்க்கு உணவளிக்கும் பொருட்டு வழிப்பறி செய்தது வேடுபறி என்று கொண்டாடப் படுகிறது.
   • கலியன் (திருமங்கை ஆழ்வார்) ததீயாராதனம் (அடியார்க்கு உணவளிப்பதைச்) சிறப்பாகச் செய்து வந்தார். ஏற்கெனவே ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யத்திலிருந்த அவர்க்குப் பொருள் இல்லாதபோது,வழிப்பறிகள் செய்தார். அவர்க்கு மெய்ஞ்ஞானமும் தரத் திருவுளம் பற்றிய எம்பெருமான் செல்வமிக்க அந்தணப் புதுமணமகனாக வந்து தன் பொருளைக் கொள்ளை அடிக்க விட்டார். இறுதியில், ஒரு சிறிய வளையம் எம்பெருமானின் காலில் இருந்து நீக்க முடியாமல் போக, கலியன் கீழே வளைந்து பற்களால் அதை வெட்டி அதை கட்டாயமாக நீக்கினார். கலியனின் துணிச்சலை வியந்த எம்பெருமான், அவரை “நம் கலியனோ” என்று அழைத்தார். (கலியன் பொதுவாக பெரிய போர்வீரன் என்று பொருள்படும், மரணத்தின் தலைவன், நேரத்தின் கட்டுப்படுத்துபவரை குறிக்கும் – அனைவரையும் பயத்தில் ஆழ்த்துபவர்- எம்பெருமான்  கூட கலியனின் வீரத்தையும் தைரியத்தையும் கண்டு பயந்தான். நகை மூட்டையை எடுத்துத் தூக்க முடியாமல் தவித்த கலியன் “ப்ராமணரே மூட்டைக்கு மந்திரம் போட்டீரோ” என வினவ.  எம்பெருமானும் ஆம் என்று கலியன் காதில் திருமந்த்ரம் ஓதி ஆட்கொண்டான். எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்ட கலியன், “வாடினேன் வாடி வருந்தினேன்” என்று திருமந்த்ர ப்ரபாவத்தைப் பாடியருளினார்.(இந்த சம்சாரத்தில் நான் நித்தியமாக துன்புற்று இருந்தேன் … திருமந்திரத்தை எம்பெருமானிடமிருந்து கேட்க்கும் வரை-பெரிய திருமொழி முதல் பாசுரம்). ப்ரமோத்ஸவத்தில் பகுதியாக இருக்கும் குதிரை வாஹனம் நாளில், இந்த முழு நிகழ்வும் பொதுவாக திவ்யதேசங்களில் நடத்தப்படுகிறது.
  • மட்டையடி – ப்ரணய ரோஷம். காதலர் இடையிலான அன்புச் சண்டை. பெருமாள்/தாயார் இருவரையும் வைத்துப் பல கோயில்களில் நடக்கிறது.
   • இது ஸ்ரீரங்கத்தில் மிக உத்ஸாகத்தோடு பங்குனி உத்தரத்தில்  கொண்டாடப்படுகிறது. வேட்டையாடச் சென்ற எம்பெருமான் வேட்டைப்புண்களோடு திருமேனியை மூடி வர, பிராட்டி திவ்ய மங்கள விக்ரஹத்தில் குருதி அடையாளங்கண்டு ஸந்தேஹம் கொண்டு
   • பெருமாள் பிற நாச்சியார்களோடு இருந்ததாக ஊடி திருக்கதவை அடைத்து அவரை உள்ளே விடாமல் தடுக்க சேதன ரக்ஷணர்த்தமாக நாம் சென்று வந்தோம் என்று அவர் சொல்வது ஏற்காததால்
   • நம்மாழ்வார் கடகராகிப் பிராட்டியம் பெருமாளும் சமாதானமாகும் நிகழ்ச்சி பூப்பந்து எறிதலோடு அழகாக முடிகிறது.
  • தீர்த்தவாரி – அவப்ருத ஸ்நாநம்: சக்கரத்தாழ்வாருக்குத் திருக்குளத்தில் அல்லது சில திவ்ய தேசங்களில் எம்பெருமானுக்கே, திருமஞ்சனம் ஆகிறது.
  • துவஜ அவரோஹணம்  – கொடி இறக்கம்:உத்ஸவம் முடிந்ததற்கு அறிகுறியாக ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்படும் நிகழ்ச்சி.
  • த்வாதச ஆராதனம் தொண்டை நாட்டு திவ்ய தேசங்களில் பல ஸந்நிதிகளில் இறுதி நாளன்று எம்பெருமானுக்குப் பன்னிரண்டு திருவாராதனங்கள் ஸமர்பிக்கப்பட்டு, திருவாய்மொழி ஆயிரமும் ஒரே தொடர்ச்சியாக  ஸேவிக்கப்படுகிறது.திருவாய்மொழி தொடங்குமுன் திருமஞ்சனமும் உண்டு.
  • சப்தாவரணம் – அன்றுமாலை எம்பெருமான் பிராட்டிமாரோடு சிறிய தேரில் அல்லது புண்யகோடி விமானத்தில் இராமானுச நூற்றந்தாதி கோஷ்டியோடு  புறப்பாடாகி ஸந்நிதி திரும்பியதும் அர்ச்சக ஸ்வாமிகள் எல்லா தேவர்கள், ரிஷிகள், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வஸ்தி வாசகம் சொல்லி வழியனுப்புதல்.
  • விடாயாற்றி பத்துநாள் உத்ஸவங்கண்ட களைப்புத் தீர எம்பெருமான் சில நாள்கள் திருமஞ்சனம்/திவ்யப்ரபந்த கோஷ்டி/இன்னிசைக் கச்சேரி என எழுந்தருளியிருப்பர்.
 • தெப்போத்ஸவம் – கோயில் புஷ்கரிணி அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் பிராட்டிமாரொடு எம்பெருமானுக்குத் தெப்ப உத்ஸவம் நடக்கும். குளத்து நீராழி மண்டபத்தைச் சுற்றித் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வருவது அழகிய காட்சி.
 • பல்லவ உத்ஸவம் – இளவேனில் காலத்தில் எம்பெருமான் புதிதாய்த் துளிர்க்கும் தளிர்கள் தழைகளை அணிந்து ஸ்தல புராணம் கேட்பது.
 • வசந்தோத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்று உள் புறப்பாடாகி சிறிது நேரம் எழுந்தருளியிருந்து திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல். அருள்வார்.பிறகு திருமஞ்சனமும் திருவராதனமும் உண்டு.
 • கோடை உத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள மண்டபத்திற்கு சென்று திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல்.
 • ஸ்ரீராம நவமி – ஸ்ரீராமன் அவதார உத்ஸவம் ஒன்பதுநாள்கள் புறப்பாடு, நவமியோடு முடிவுறுவது
 • பவித்ரோத்ஸவம் – கோயில் வழிபாடுகள் யாவும் பாஞ்சராத்ர/வைகாநஸ ஆகம விதிகளின்படி நடக்கின்றன. இவற்றில் ஏதாகிலும் குறை/பிழை ஏற்படக்கூடும் என்பதால் அதை நிவ்ருத்தி செய்ய மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு நாள்கள் குண்டங்கள் நிர்மாணித்து எம்பெருமானையும் தாயாரையும் தினமும் யாகசாலைக்கு எழுந்தருளச் செய்து, திவ்ய ப்ரபந்தம், வேத இதிஹாஸ புராண பாராயணங்களுடன் ஈடு/ஸ்ரீபாஷ்ய பாராயணங்களும் நடத்தப்படும். எம்பெருமானுக்குத் திருமஞ்சனமும் உண்டு.
 • ஆனி (ஜ்யேஷ்ட மாச) கருடோத்ஸவம் – ஆனி  ஸ்வாதியில் பெரியாழ்வார் திருநக்ஷத்ரத்தன்று அவர் பரத்வ நிர்ணயம் செய்தது ஒட்டி எம்பெருமான் கருட வாஹனனாகப் பெரியாழ்வார்க்கு ஸேவை சாதிப்பார்.
 • ஜ்யேஷ்டாபிஷேகம்: எல்லா எம்பெருமான்களும் கவசத்தோடேயே ஸேவை சாதிப்பர். இந்த நாளன்று கவசங்கள் களையப்பட்டு திருமஞ்சனம் ஆகி அழகிய திருமேனியை யாவரும் ஸேவித்தபின் திருவாராதனமாகி ஸேவை ஆகும். இதன்பின், பவித்ரோத்ஸவம் கண்டருளும்வரை எம்பெருமானுக்குப் புறப்பாட்டுடன் உத்ஸவாதிகள் இராது.
 • ஆடிப் பௌர்ணமி கருடோத்ஸவம் – கஜேந்திர மோக்ஷம் – பொதுவாக இது யஜுர் உபாகர்மத்தன்று வரும்.
 • ஸ்ரீஜயந்தி – ஆகம விதிப்படியும், ஆவணி மாதம்/அஷ்டமி திதி அல்லது ரோஹிணி நக்ஷத்ரப்படியும் இது கொண்டாடப்படும். மாலை தொடங்கி நள்ளிரவு வரை இது நீடிக்கும்.
 • .நவராத்ரி – 9 நாள்கள் தாயார் புறப்பாடு, ஊஞ்சல்.
 • விஜயதசமி – பரிவேட்டை – எம்பெருமான் வேட்டையாட வெளியே எழுந்தருள்வது
 • தீபாவளி – பெருமாள்/தாயார் புறப்பாடு இது பெரும்பாலும் மாமுனிகள் அவதார உத்ஸவதோடு வரும்
 • கார்த்திகை தீபம் + அநத்யயந காலத் தொடக்கம் – திருவிளக்குகள் பல ஸந்நிதிகளில் ஏற்றப்படும். பெருமாள் புறப்பாட்டின்போது சொக்கப்பனை கொளுத்தப்படும்.
 • அத்யயந உத்ஸவம் 20+ நாள்கள் நம்மாழ்வார்க்கும் திருவாய்மொழிக்கும் என்றே ஏற்பட்ட மஹோத்ஸவம் (இணையதளம் காண்க)
 • மார்கழி – தனுர்மாஸம். திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி முப்பது நாள்களும் அதிகாலையில் அனுசந்திக்கப்படும்.
  • பல ஸந்நிதிகளில் திருப்பாவை காலக்ஷேபங்கள் உண்டு.
  • 21வது நாள் முதல் ஆண்டாள் நீராட்ட உத்ஸவம் புறப்பாட்டுடன் நடக்கும்.
  • போகி – ஸங்கராந்திக்கு முன் தினம். ஆண்டாள்/பெருமாள் திருக்கல்யாணம் .
  • ஸங்கராந்தி  – ஆண்டாள்/பெருமாள் விசேஷப் புறப்பாடு.
 • மாசி மகம் – பெருமாள் தீர்த்தவாரிக்குக் கடற்கரை எழுந்தருளல்.
 • பங்குனி உத்தரம் – பெருமாள்/தாயார் சேர்த்தி; கத்ய த்ரய ஸேவை – http://ponnadi.blogspot.in/2013/03/panguni-uthram-and-emperumanar.html

ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் திருநக்ஷத்ரங்கள் (அவதாரத் திருநாள்கள்)

ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்களிலும் ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் அவதரித்த அந்தந்த ஸ்தலங்களிலும் இவை மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. எல்லா ஸந்நிதிகளிலும் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்,எம்பெருமானார், மாமுனிகள்,ஆண்டாள் உத்ஸவங்கள் நன்கு கொண்டாடப் படுகின்றன.  என்றாலும் ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் திரு அவதார உத்ஸவமும், திருவாலி திருநகரியில் கலியன் திரு அவதார உத்ஸவமும், ஸ்ரீபெரும்பூதூரில் எம்பெருமானார் அவதார உத்ஸவமும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் திருவாடிப்பூர உத்ஸவமும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படும் என்பது சொல்லவும் வேண்டுமோ! இவை யாவும் ஸ்ரீவைஷ்ணவர்களை ஒருங்கிணைத்துக் கைங்கர்யத்தில் ஈடுபடுத்துவதற்கே.

இல்லங்களில் உத்ஸவங்கள்

ஸ்ரீஜயந்தி ஸ்ரீராமநவமி வ்ருஷப் ப்ரவேசம் மகர சங்கராந்தி ஆழ்வார்/ஆசார்யர்கள் திருநக்ஷத்ரங்கள் இல்லங்களிலும் கொண்டாடப் படுகின்றன.

 • ஸ்ரீஜயந்தி (கண்ணன் திரு அவதாரம்)
  • பொதுவாக மாலையில் கொண்டாடப்படுவது.
  • மாலைவரை உபவாஸம்
  • சிலர் திருவாராதனம் ஆகியும், உணவு உட்கொள்ளாமல் பால் பழம் மட்டும் அருந்துவதுண்டு.
  • காலை முதலே கண்ணன் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வெவ்வேறு வகை பக்ஷணங்கள் செய்வதுண்டு
  • மாலை திருமஞ்சனம், கண்ணன் எம்பெருமான் அவதாரம் பாடும்  திவ்யப்ரபந்த ஸேவை , இவற்றோடு விதவித பக்ஷணங்கள்/பால்/தயிர்/வெண்ணெயுடன் திருவாராதனம்
  • திருவாராதனம் ஆகி ப்ரஸாத ஸ்வீகாரம்
 • ஸ்ரீராமநவமி (ஸ்ரீ ராமன் அவதரித்த திருநாள்)
  • பொதுவாகக் காலையில் அநுஷ்டிக்கப்படுவது
  • திருமஞ்சனம், பெருமாள் திருமொழி/பெரியவாச்சான்பிள்ளையின் பாசுரப்படி ராமாயணம் ஸேவை
  • வடைப்பருப்பு/பானகம்/நீர்மோர் இவை வெயில் கருதி சமர்ப்பணை
 • வருஷப்ரவேசம், மகர ஸங்க்ராந்தி (பொங்கல்), கார்த்திகை தீபம் இவை திருவாராதனம், சிறந்த ப்ரஸாத சமர்ப்பணைகளோடு விரிவாக நடக்கும்
 • ஆழ்வார்/ஆசார்யர்கள் திருநக்ஷத்ரங்கள்
  • பொதுவாகக் காலையில் நடக்கும்
  • விரிவான திருவாராதனம் உண்டு
  • ஆழ்வார்கள் திருநாளில் அவ்வாழ்வார்களின் திவ்யப்ரபந்தங்கள் ஸேவிக்கப்படும்
  • ஆசார்யர்கள் திருநக்ஷத்ரத்தன்று அவ்வவாசார்யர்கள் சாதித்த கிரந்த ஸேவை – ஆளவந்தார்க்கு ஸ்தோத்ர ரத்னம், எம்பெருமானார்க்கு கத்ய த்ரயம், மாமுனிகளுக்கு உபதேச ரத்தின மாலை/திருவாய்மொழி நூற்றந்தாதி என்பது போல்
  • முடிவில் சாற்றுமுறை ஆகும்போது அவ்வவாசார்யரின் வாழித்திருநாமப் பாசுரங்கள் இருமுறை ஸேவிக்கப்படும்
  • பகல் பொழுதில் அவ்வாசார்யர்கள் க்ரந்த காலக்ஷேபம்/மூல க்ரந்த படனம் உண்டு

இல்லங்களில் சேவாகாலம் என்பது குறைந்தது திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலானாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு, (முடிந்த அளவு) கோயில் திருவாய்மொழி, இராமானுச நூற்றந்தாதி, உபதேச ரத்தின மாலை இவை உட்கொண்டதாய் இருக்கும்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://koyil.org/index.php/srivaishnava-uthsavams/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org